Thursday, January 10, 2008

ஒரம்போ..ஒரம்போ...லட்ச ரூபா வண்டி வருது..!


டாடா நிறுவனத்தின் 1 லட்ச ரூபாய் கார் அதோ இதோ என்று ஒரு வழியாக வெளியாகி விட்டது. உலகின் மலிவான காரை தயாரித்து இந்திய நாட்டினை உலக அரங்கில் பெருமை படுத்தி இருக்கிறார் ரத்தன் டாடா. இந்த கனவை சாத்தியம் ஆக்க இரவு பகல் பாராமல் உழைத்த பொறியாளர்கள் குழுவுக்கும் சபாஷ்.

மாருதி போன்ற போட்டி குழுமங்களின் வயிற்றெரிச்சலை தாண்டி சாதித்திருக்கும் டாடாவின் இந்த காரில் சில நல்ல அம்சங்கள் உண்டு.

முக்கியமாக, ஒரு பைக் அல்லது ஸ்கூட்டர் ஏற்படுத்தும் சுற்றுப்புற சீர் கேட்டினை விட மிக குறைவான புகை ... யூரோ 4 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்டு தயாரித்து இருப்பது பெரிய ஆறுதல்.
ஏறக்குறைய எல்லா தளங்களும் இந்த காரின் தொழில் நுட்ப சமாசாரங்களை அலசி காய போட்டு இருப்பார்கள் (624 ஸீஸீ இஞ்சின் , 1 லிட்டர் பெட்ரோலுக்கு 20 கிலோ மீட்டர் வரை செல்லும் போன்றவை...)
ஆனால் இந்த கார் ஏற்படுத்த கூடிய எதிர் வினைகளை யோசிக்கிறேன்...

1. இரு சக்கர வாகனங்களின் விற்பனை சரிவு -விலை குறைப்பு நடவடிக்கை

2. இந்த மாத இறுதி க்குள் 9500 ரூபாய் வரை விலையை உயர்த்த எண்ணி இருந்த மாருதி குழுமத்தின் நினைப்பில் மண்.

3. 2 சக்கர வாகன நிறுவனங்கள் (உதாரணம் - பஜாஜ் ) வெளியிட்ட
பங்குகளின் விலை சரியும். அவற்றை வாங்கியவர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம்.

4.சிறிய கார்கள் மீது மோகம் பெருகும். புதிதாய் கல்யாணம் செய்தோரின் குடும்பத்தின் அளவை காண்டம்கள் மட்டுமல்ல இனி கார்கள் கூட தீர்மானிக்கலாம்.

5. ஏற்கனவே 17ம் தேதிக்கு பின் பெட்ரோல் விலை உயர இருக்கும் சூழலில் இந்த காரின் உற்பத்தி பெருகும் பட்சத்தில் பெட்ரோல் தேவை அதிகரிக்கும். பற்றாக்குறை தவிர்க்க முடியாமல் அதிக டாலர் விலைக்கு உபரி கச்சா எண்ணை வாங்கப் படலாம்.

(தள்ளு மாடல் வண்டி இது தள்ளி விடுங்க ..எண்ணை விலை ஏறி போச்சு மாட்ட பூட்டுங்க .. என்று அப்போ நாம் பாடலாம்...)

6. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கார் தயாரிக்க கால் வைக்கும்.
காங்கிரஸ் வழக்கம் போல் பச்சை கொடி காட்டும். மார்க்ஸிஸ்ட் முதலில் வீறு கொண்டு எதிர்த்து பின்னால் கூட்டணி தர்மப்படி அமைதி காக்கும்.

7.டாடா நிறுவனம் தனது 1 லட்ச ரூபாய் கார் தொழிற்சாலையை சிங்கூரில் அமைக்க உள்ளது. சிங்கூரில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க விளை நிலங்களை தனியாருக்கு தாரை வார்ப் பதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் அரங்கேறிய வன்முறை - போலீஸ் தடியடி எல்லாம் நினைவில் வருகிறது. ஏற்கனவே நந்தி கிராமால் நாறிப் போயிருக்கும் புத்ததேவின் அரசு திரிணாமூல் கட்சியால் மேலும் சிக்கலை சந்திக்கும்.

இந்த பரிட்சைகளை தாண்டி தேறினால் மட்டுமே, டாடா தனது வெற்றியை முழுமையாக கொண்டாட முடியும்.

அதுவரையில் இவ்வெற்றி தற்காலிகமானதே..!

2 comments:

Ashwin said...

nalla review of d car....think u haven't missed any feature

Unknown said...

Nama ethu mathiri pros and cons yosichalum, eppadi oru muyarchi kandippa paratta vendiyathu...I hope tata will succeed in his launch...enimel car-ngra vishayam ellaralayum vanga mudiyum...