Wednesday, November 14, 2007

கலைஞானிக்கு பிறந்த நாள் வாழ்த்து கவிதை.

கலைஞானி கமல்ஹாசனின் பிறந்த நாள் அன்று என் நண்பர்கள் நிர்வகிக்கும் அவரது ஆர்க்குட் குழுமத்தில் அடியேன் எழுதிய பிறந்த நாள் வாழ்த்துக் கவிதை

உலக நாயகனே,

நீ

மனசுக்கு ஒப்பனை போடாத

மாபெரும் கலைஞன்


நவம்பர் 7 அன்று உன்

இளமை ஊஞ்சலாடுவதைக் கண்டு

தனக்கு வயதாகி விட்டதென்று

மீண்டும் ஒரு முறை

ரகசியமாய் வெட்கப்பட்டது காலம்..!


சிகப்பு ரோஜாக்களோடு உனக்காக

காத்திருக்கும் தமிழ்நாட்டு கன்னியர்க்கு

இன்று தான் காதலர் தினமாம்


பாவம் உன் முத்தங்களையாவது

அவர்களுக்கு காற்றில் அனுப்பி வை...


உன்னிடம் முத்தம்

வாங்காத நாயகியர் எல்லாம்

மோட்சம் பெறாத அகலிகைகள்


என் கணக்கில்

இன்னும் வயதுக்கு வராதவர்கள்...

தமிழ் சினிமாவின் பேரகராதி நீ

உன் சாதனை பக்கங்களை எல்லாம்

விரலை வைத்து வித்தை காட்டும்

பொடியர்கள் ரகசியமாய் பிட் அடிக்கிறார்கள்


என்னால் இயன்ற தமிழில்

உன் சாதனை பக்கங்களை பற்றி

சொல்லத் தான் நினைக்கிறேன்..


உனது அரங்கேற்றம் தூங்கிக்

கிடந்த தமிழ் சினிமாவைத் தட்டி எழுப்பியது...!


விழித்து கொண்ட வெள்ளித் திரை

நீ என்னை ஆள வந்தான் என்று

வெண்சாமரம் நீட்டி வரவேற்றது.


தீயதிலும் நல்லதை ஏற்பவன் நீ

அதனால் தானோ உன் திரை வாழ்விலும்

சொந்த வாழ்விலும் காதல்கள்

தோற்ற போதெல்லாம்

மூன்றாம் பிறை,வாழ்வே மாயம் என

வெற்றிகள் பிரம்மாண்டமாய்

உன்னிடம் கை குலுக்கி கொண்டன.


அக்ஷாரா ஸ்ருதி.....

உன் மன்மத லீலையில்

விளைந்த காதல் பரிசு.


கடலை குடையக் கலைஞர்

சொன்னது நோ ராம்

காந்தியாரை புரிந்திட நீ

எமக்கு தந்ததோ ஹே ராம்


நீ அல்பசினோ, சிவாஜி

எனும் மலைகளைக்

காதலிக்கும் மகாநதி..


உன்னை பற்றி எழுதும் போது

எனக்கு நானே மகுடம்

சூட்டிக் கொள்கிறேன்...

நீ எனக்குள் ஒருவன் அல்லவா.


இயக்குநர் சிகரத்தின் இரு கரம்

உன் வாழ்வுக்கு விதை போட்டது

அன்னை இல்லத்தின் ஆல மரமோ

உன் நடிப்புக்கு உரம் போட்டது.


ஆசிரியன் அனந்துவின்

ஆழ்ந்த ஞானமோ உன்

ஆர்வத்துக்கு தீனி போட்டது.



நல்ல சினிமா தருவதற்கு

நீ இஷ்டப்பட்டே கஷ்டப் படுகிறாய்

சில முறை அதனால் நஷ்டப் படுகிறாய்


உலக சினிமாவின் நுட்பங்களை

உள்ளங்கையில் சிறைப் பிடித்த

நவீன அலெக்சாண்டர் நீ


தோல்வி சோதனைகளைச் வெற்றிச்

சாதனையாய் உருமாற்றும்

திரை விஞ்ஞானி நீ


உனக்கு சாத்தியம் என்பது

சொல்லை விடவும் செயல் அன்றோ?


தமிழ் திரையின் தாமஸ் ஆல்வா எடிசனே
எப்படியும் ஒரு நாள் நீ ஏற்றி வைப்பாய்

ஆஸ்கர் எனும் அற்புத விளக்கை.

Wednesday, September 5, 2007

சிவாஜி - சில கேள்விகள்

எங்கள் ஊரில் அநேகமாக ஊர் பேர் தெரியாத நடிகர்கள் நடித்த படமோ...(உதாரணம் தொல்லை பேசி) அல்லது ஹாலிவுட் நட்சத்திரங்கள் தமிழ் பேசும் படமோ (எல்லாரும் ஒடுங்க ... ஒடுங்க அது நம்மளை துரத்தி வருது..!) ஓடுகிற காரணத்தால் சரியாக 75 நாட்கள் கழித்து 50 பேருக்கும் குறைவான பார்வையாளர்கள் வந்த ஒரு மாலைக் காட்சியில் சிவாஜியை என் பெற்றோருடன் பார்த்தேன்.

எல்லாரும் படத்தை அலசி காய போட்டு விட்டபடியால் விமர்சனம் செய்ய ஒன்றும் இல்லை. இருந்தாலும் என் மனதில் தோன்றிய கேள்விகளை மட்டும் முன் வைக்கிறேன்..

ஷங்கர்:

இது ரஜினி நடித்த உங்கள் படமாகவும் இல்லை. அல்லது நீங்கள் இயக்கிய ரஜினி படமாகவும் இல்லை. பாட்ஷா போல மனத்தில் நிற்க கூடிய படமாகவும் இல்லை, அய்யம் பேட்டை அறிவுடை நம்பி கலிய பெருமாள் சந்திரன் போல ரசிக்க கூடியதாகவும் இல்லை உங்கள் படம்.

எப்படி எடுப்பது என்று குழம்பி முதல் பாதியை விறுவிறுப்பாக இல்லாமல்
ஏனோ தானோ என படமாக்கி ஈ டுபாட்டை குறைத்து விட்டது ஏன்?.
உதாரணமாக, 'வாங்க பழகலாம்' காட்சிகள் சிரிப்புக்கு பதிலாய் எரிச்சலை தான் தருகின்றன..!

ஏ .ஆர்.ரஹ்மான்:

அருமையான பாடல்கள் . ஆனால், பின்னணி இசை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பீர்களா? ராஜாவிடம் டியூஷன் செல்லுங்களேன்..!

விவேக்: உடல் ஊனமுற்றவர்களையும் (பேரழகன்), அரவாணிகளையும் (இப்போ தான் ஆபரேஷன் பண்ணிட்டு வந்து ஆம்பளையா மாறி..) நகைச்சுவை என்ற பெயரில் புண்படுத்துவதை, ,எம்.ஆர்.ராதா மாதிரி பேசுவதை, இரட்டை அர்த்த வசனங்களை (உதாரணம் மாமா) எப்போது நிறுத்துவதாய் உத்தேசம் விவேக்?

பீட்டர் ஹெய்ன்:

இன்னும் எத்தனை நாள் தான் உங்கள் தேசத்து டோனி ஜா படங்கள் (Ong Bak, Tom Yoo Gong) மற்றும் மேட்ரிக்ஸ் படங்களை காப்பி அடித்து சண்டை காட்சிகள் அமைப்பீர்கள்?

சுஜாதா:

அடிக்கடி படத்தில் வருகிற வசனம் ப்ராஜக்டின் மதிப்பு 200 கோடி. ஏறக்குறைய 30 வயசு போல் தோன்றும் ரஜினி.. ஏழை அப்பா அம்மாவிற்கு வீடு கட்டி,பென்ஸ் கார் வாங்கி தருதல் மாதிரி முக்கிய செலவு போக
மாசம் 10 லட்சத்திற்கு மேல் வாங்குகிறார் என்று வைத்தாலும்.. அவரது வயதும் சம்பளமும் உதைக்கிறது.

ஒரு வேலை ரொம்ப சீக்கிரம் வேலைக்கு போய் விட்டாரா?

பில் கேட்ஸ் கூட இவ்வளவு மாத சம்பளம்வாங்க மாட்டாரே?.(இதை கணக்கு போடுவதற்குள் என் மண்டை காய்ந்து விட்டது...!). அப்புறம் Cardiopulmonary resuscitation என்றால் என்னவென்று தெரியாத ஒரு அமெரிக்கன் உண்டா?விவேக் போடா கூ... என்றவுடன் ரஜினி உடனே வாயை மூட... கபோதி என்று அவர் சொல்லுகிற அளவுக்கு உங்கள் வசனம் 'நாகரீகத்தின்' உயரத்தை தொட்டிருக்கிறது.

தமிழ் நாட்டில் உள்ள தமிழ் ஆர்வலர்களுக்கும்,அரசியல்வாதிகளுக்கும்:

எஸ்.ராம கிருஷ்ணனிடம் சண்டை கோழியாய் சிலிர்த்த நீங்கள் வள்ளல் பாரியின்மகள்கள் அங்கவை - சங்கவையை கேவலப்படுத்தி இருக்கும் உன்னதமான முயற்சிக்கும், மதிப்பிற்குரிய சாலமன் பாப்பையா அவர்களை 'பழக வைக்க ஏற்பாடு செய்பவராக' காட்டி இருக்கும் அதிமேதாவித்தனத்துக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?

ஷ்ரீயா:

ஹிந்தி திரை உலகில் 2 தோல்வி படங்கள் தந்து தமிழுக்கு வந்திருக்கும் தமிழே தெரியாத மற்றொரு நடிகைக்கு நடிப்பு மட்டும் எங்கிருந்து வரும்..? பாடல் காட்சிகளில் ஓப்பன் யூனிவர்சிட்டி ஆக வலம் வரும் இவர் ரொம்ப சிரமப்பட்டு நடித்திருக்கிறார். முகபாவங்கள் மலச்சிக்கல் வந்தவர்களின் அவஸ்தையை நினைவு படுத்துகிறது

ரஜினி:

வயதை மறைக்க மிகுந்த சிரமப்பட்டிருக்கும் நீங்கள் இந்த படத்தை காப்பாற்ற ரொம்ப உழைத்திருக்கிறீர்கள். (ஆனால் வீண்) பொதுவாக உங்கள் படத்தில் வரும் உங்களின் அறிமுக காட்சி ரொம்ப ஆரவாரமாக, இருக்கும். ஆனால் இதில் சப்பென்று இருக்கிறது..!

உங்கள் பலமே பன்ச் டயலாக்குகள் மட்டும் தான்.. ஆனால் விவேக் மூலமாய் பன்ச் டயலாக்குகள் பேச வைத்திருப்பது அந்த டயலாக்குகளை கேலிக்கூத்தாகி விடுகிறது. நீங்கள் ஒரு நல்ல நடிகர். கமர்ஷியல் ஸக்ஸஸ் என்கிற சுனாமி அலை ஏறக்குறைய உங்கள் நடிப்பை மூழ்கடித்து விட்டது..! கருப்பு வெள்ளை காலத்தில் அவள் அப்படி தான் போன்ற எவ்வளவோ
அருமையான படங்கள் செய்து இருக்கிறீர்கள். அந்த துணிச்சல் ஏன் இப்போது உங்களுக்கு இல்லை?. குறைந்த பட்சம் உன் கண்ணில் நீர் வழிந்தால் மாதிரி ஒரு படம் எப்போது தருவீர்கள்?

கடைசியாக AVM நிறுவனத்துக்கு:

ஒரு average commercial படத்திற்கு 80 கோடி ரூபாயை செலவு செய்திருப்பதற்கு பதிலாக
அப்பச்சி பெயரில் தமிழ் நாடு முழுக்க டைடல் பார்க் கட்டி இருந்தால் ஏகப்பட்ட பேருக்கு வேலை கிடைத்திருக்குமே.
மொத்தத்தில் உங்கள் படம் தசாவதாரத்திற்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது.
எப்படி பிரம்மாண்டமாக எடுக்க கூடாது என்பதற்கு.

Friday, August 31, 2007

நுழைவாயில்

ஒரு வழியாய் நானும் ஒரு வலைப் பதிவு தொடங்கி விட்டேன்.
என்ன எழுதுவதென்று தெரியாமல் வானப்பலகையில் நீல நிறத்தைக் கொட்டி விட்டுப் போகும் ஒரு பறவையின் சந்தோஷத்தோடு யோசிக்கிறேன்..!

நேற்றைய மரணங்களை பற்றிச் சிந்திக்காமல் ஒவ்வொரு நாளும்
புதிய நிறங்களால், வாசத்தால் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிற
பூக்களைப் போல....

நெஞ்சில் தோன்றும் நினைவுகளை, பார்த்ததை, கேட்டதை, படித்ததை, ரசித்ததை

இப்படி எதை பற்றியும் நேர்மையாகப் பதிவு செய்வதே என் நோக்கம்.

மற்றபடி...

ஓவியத்தில் மறைந்து கிடக்கும் நிறங்களின் ஆழமான மௌனத்தைப் போல்

இது மிகுந்த தோழமையோடு உங்களை வரவேற்கும்

ஓர் ரசிகனின் எண்ணங்கள் வெளியிடும் நேசப் புன்னகை...!